புதன், 9 ஜூலை, 2014

பணக்காரர்களுக்கு எனப் பிரத்யேக வரி விதிக்கக் கூடாது?

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுக் காலத்தில் பணக்காரர்கள் எண்ணிக்கை மிக வேகமாக வளர்ந்து இருக்கிறது. ‘பெயின் அண்ட் கோ கன்சல்டன்ஸி’யின் ஆய்வின்படி, 2000-க்குப் பின்னர் இந்தியாவில் பணக்காரரர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 11 சதவீதம் என்கிற அளவில் வளர்ந்துவருகிறது. கடந்த ஆண்டு ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை உலகெங்கும் ஒரு பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ. 4.8 ஆயிரம் கோடி) மேல் சொத்துகள் வைத்து இருப்போரின் பட்டியலை வெளியிட்டது. ஏறத்தாழ ஆயிரம் பேர் கொண்ட அந்தப் பட்டியலில் இடம்பெற்று இருந்த இந்தியர்களின் எண்ணிக்கை 49. இந்த 49 பேருடைய மொத்த சொத்துகளின் மதிப்பு 222.1 பில்லியன் டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10 லட்சத்து 66 ஆயிரத்து 80 கோடி). இந்திய அரசின் 2011-12-ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த வரி மற்றும் வரியில்லாத வருவாய் மதிப்பீட்டு அளவு ரூ. 10.57 லட்சம் கோடிதான். அதாவது, இந்திய அரசாங்கத்தின் ஒட்டுமொத்த வரி வருமானமும் 49 பணக்காரர்களின் சொத்து மதிப்பும் கிட்டத்தட்ட சமம். ஆனால், நாட்டின் வரி வருவாயில் பணக்காரர்களின் இந்த வளர்ச்சி எந்த அளவுக்குப் பிரதிபலிக்கிறது?

                          இந்தியாவின் மக்கள்தொகை 120 கோடி. ஆனால், வருமான வரி செலுத்துபவர்கள் 4 சதவிகிதத்துக்கும் குறைவு. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிட்டால், மொத்த வரியின் பங்கு சுமார் 10 சதவிகிதம்தான்.
இந்தியாவில் ரூ. 8 லட்சத்துக்கு அதிகமாக ஆண்டு வருமானம் உள்ள எவருக்கும் விதிக்கப்படும் வருமான வரி 30 சதவிகிதம். நீங்கள் மாதம் ரூ. 70 ஆயிரம் சம்பளம் வாங்கும் மென்பொருள் நிறுவன அதிகாரியாக இருக்கலாம்; அல்லது ஆயிரம் பேருக்கு மாதம் ரூ. 70 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் தரும் பத்து மென்பொருள் நிறுவனங்களை நடத்தும் தொழிலதிபராகவும் இருக்கலாம். ஆனால், நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரி... உங்கள் வருமானத்தில் 30 சதவிகிதம்தான். இந்தியா ஏன் பெரும் பணக்காரர்களுக்கு எனப் பிரத்யேக வரி விதிக்கக் கூடாது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக