இந்த தூத்தூர் தீவின் நீரோடியிலிருந்து தொடங்கும் தமிழகத்தின் கடல் எல்லை திருவள்ளூர், பழவேற்காட்டில் முடிகிறது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுகை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலுார், விழுப்புரம், காஞ்சி, சென்னை, திருவள்ளூர் ஆகிய 13 மாவட்டங்கள் கடலோரத்தில் இருக்கின்றன. இங்குள்ள 591 பாரம்பரிய மீனவ கிராமங்களில் இருக்கும் சுமார் 10 லட்சம் மீனவ மக்களைத்தான் நாம் ‘மீனவர்கள்' என்று அழைக்கிறோம்.
புரிதல் கோளாறு
புரிதல் கோளாறு
கடல் பழங்குடிகளான மீனவ மக்களின் துயரங்களுக்கும் அவர்களுடைய வாழ்க்கை மீதான புறக்கணிப்புக்குமான முக்கிய மான காரணங்களில் ஒன்று, புரிதல் கோளாறு. உண்மையில் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் ஒரு மீனவர் கரையில் குறைந்தது 16 குடும்பங்களுக்கு வாழ்வளிக்கிறார். ஒரு மீனவர் செல்லும் மீன்பிடிப் படகு, வலை உள்ளிட்ட உபகரணங்கள் உற்பத்தியில் ஈடுபட்டிருப்பவர்கள் இந்தச் சங்கிலியின் தொடக்கக் கண்ணிகள் என்று வைத்துக்கொள்வோம். படகில் எடுத்துச்செல்லப்படும் ஐஸ் கட்டிகள், படகுக்கான டீசல், அவற்றைக் கடற்கரைக்குக் கொண்டுவந்து சேர்க்கும் லாரிகள் உள்ளிட்டவையெல்லாம் மையக் கண்ணிகள். கடலிலிருந்து மீனவர் கொண்டுவந்து சேர்க்கும் மீன்களுக்கு ஏலம் நடத்தும் தரகர்கள், ஏலம் எடுக்கும் மொத்த வியாபாரிகள் என்று பல கை மாறி நம் வீட்டுத் தட்டில் விழுந்து, நம் வாய்க்குள் போவதற்குள் குறைந்தது 16 குடும்பங்களுக்குச் சோறு போட்டுவிடுகிறது அந்த மீன்.
விரியும் கடல் தொழில்
இந்தியா உலக அளவில் மீன் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. பஞ்சத்தாலும் வறட்சியாலும் அடிபட்டுக் கிடந்த நாட்டைத் தூக்கி நிறுத்த சுதந்திரத்துக்குப் பின் வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்த அரசு, வெறும் நெல்லாலும் கோதுமையாலும் மட்டும் மக்கள் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திவிட முடியாது என்பதை உணர்ந்தபோது, கடலைப் பார்த்தது. 1950-ல் 7.52 லட்சம் டன்னாக இருந்த இந்தியாவின் மீன் உற்பத்தி 1990-ல் 38.36 லட்சம் டன்னாக உயர்ந்தது. தாராளமய மாக்கலுக்குப் பின் இந்த உற்பத்தி வேகம் மேலும் அதிகரித்தது. 1990-2010-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மட்டும் இந்தியாவின் மீன் உற்பத்தி இரு மடங்கு அதிகரித்தது. 2012-ல் 90 லட்சம் டன்னாக இருந்த உற்பத்தி, கோடி டன் இலக்கை நோக்கி நகர்கிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் ஒரு சதவீதத்தைப் பங்களிக்கும் மீனளத் துறை, ஏற்றுமதித் துறைக்கான பங்களிப்பிலும் முன்னணி வகிக்கிறது (ஆண்டுக்கு ரூ. 21,000 கோடி).
இந்தியாவின் முன்னணி மீன் உற்பத்தி மாநிலங்களில் தமிழகமும் ஒன்று - குஜராத், கேரளம், மகாராஷ்டிரத்துக்கு அடுத்து நான்காவது இடத்தில் இருக்கிறது. நாட்டின் மொத்தக் கடற்கரையில் 13%-ஐப் பெற்றிருக்கும் தமிழகம் நாட்டின் மீன் உற்பத்தியிலும் அதற்கு இணையான பங்களிப்பைத் தருகிறது. ஆனால், நகரத்தில் ஒரு தெரு நாய்க்கு உள்ள பாதுகாப்புகூட கடலில் மீனவர்களுக்கு இல்லை; தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடித்துத் துரத்தப் படுவதும் சுடப்படுவதும், அவர்தம் உடைமைகள் சூறையாடப்படு வதும், படகுகள் கொள்ளையடிக்கப்படுவதும் சர்வ சாதாரணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக