புதன், 2 ஜூலை, 2014

இஸ்ரோ- வரலாற்றுப் பயணத்தில் இன்னொரு மைல்கல்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) வரலாற்றுப் பயணத்தில் இன்னொரு மைல்கல்! பி.எஸ்.எல்.வி. ஏவுகலம் தொடர்ந்து 26-வது முறையாக வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்திருக்கிறது. வணிகரீதியான ஏவுசெயல்பாடுகளில் இது நான்காவது வெற்றி. ஸ்பாட்-7 என்ற பிரான்ஸின் புவியாய்வு செயற்கைக் கோளையும், ஜெர்மனி, கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் நான்கு சிறு செயற்கைக் கோள்களையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி அவற்றின் சுற்று வட்டப்பாதையில் அவற்றை நிலைநிறுத்தியிருக்கிறது பி.எஸ்.எல்.வி., தனக்கே உரிய லாவகத்துடன்.
இந்த ஏவுசெயல்பாட்டை நேரில் இருந்து பார்த்த பிரதமர் மோடி, “நம் நாட்டால் எதையெல்லாம் சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்” என்று விஞ்ஞானிகளைப் பாராட்டியிருக்கிறார். மேலும், “இந்தியா தனது தொழில்நுட்பச் சாதனைகளின் பலன்களை, தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடையாத நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவும் வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார். தெற்காசிய நாடு களுக் கான ஒருங்கிணைந்த செயற்கைக்கோள் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்மூலம் அருகமை நாடுகள் ஒன்றுக்கொன்று உதவிக்கொள்ள லாம் என்பது அவரது எண்ணம். சீனா, தனது வெளியுறவின் ஒரு பகுதியாக பிரேசிலுடன் இணைந்து புவியாய்வு செயற்கைக் கோள்களை உருவாக்குவதுபோலவே இந்தியாவும் தனது விண்வெளி ஆய்வை வெளியுறவுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்தும் வல்லமை இஸ்ரோவுக்கு இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. வளர்ந்துவரும் நம் நாட்டின் அன்றாடத் தேவைகளை எதிர்கொள்வது என்பது இஸ்ரோ நிறுவப்பட்டதிலிருந்து அதன் அடிப்படை நோக்கங்களுள் ஒன்றாக இருக்கிறது. வானிலை, புவியாய்வு, தகவல்தொடர்பு போன்றவற்றுக்காகச் செயற்கைக் கோள்களை உருவாக்கவும் ஏவவும் இன்று இந்தியாவால் முடியும். இஸ்ரோவின் இந்தத் திறன்கள் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டியவை என்றும் அரசு நிர்வாகத்துக்கும் வளர்ச்சிக்கும் இந்திய விண்வெளித் திட்டங்கள் மேலும் பயன்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியிருக்கிறார்.
மேம்பட்ட செயற்கைக் கோள்களை இன்னும் அதிகமாக உருவாக்குவது தவிரவும் ‘உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் ஏவுதல் சேவையை வழங்கக்கூடிய நாடு’ என்ற பெயரையும் இந்தியா எடுக்க வேண்டும் என்பது அரசின் விருப்பம். இந்த லட்சியங்களை சாதிப்பது அவ்வளவு எளிதல்ல. உலகளாவிய ஏவுதல் அரங்கில் தற்போது இந்தியா சிறிய அளவிலேயே சேவை அளித்துவருகிறது; தனது கனரகச் செயற்கைக் கோள்களை ஏவுவதற்குப் பிற நாடுகளை நம்பித் தான் இந்தியா இருக்கிறது. நாம் செல்ல வேண்டிய தொலைவு அதிகம். எனினும், இஸ்ரோ சாதிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இத்தகைய தருணங்களில், விஞ்ஞானிகளைத் தாண்டி, பொதுத் தளத்தில் இருப்பவர்கள் ஒரு கேள்வியை எழுப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அறிவியல், ஆராய்ச்சித் துறைக்கு எந்த அளவுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்கிறோம் என்பதே அது. பள்ளிகளில் தொடங்கி நாடாளுமன்றம் வரை இருப்பவர்கள் இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கக் கட்டுப்பட்டவர்கள். கனவுகள் நனவாகக் களம் முக்கியம் அல்லவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக