வியாழன், 31 ஜூலை, 2014

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் புதிய வடிவினைப் பெற்றிருக்கிறது. மத்திய அரசின் திட்டமாக இதுவரை நிறைவேற்றப்பட்டுவந்த இது, இனி மாநில அரசுகளின் பொறுப்பில் விடப்படுகிறது. நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அத்துடன் 2014-15-ம் நிதியாண்டுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.33,364 கோடி செலவிடப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு அதிகரிப்பு, கிராமப்புற வளர்ச்சி ஆகிய மூன்று லட்சியங்களை நிறைவேற்றும் கருவியாக, காங்கிரஸ் தலைமையிலான அரசு கொண்டுவந்த இந்தத் திட்டம் தொடர்வதுடன் நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இந்தத் திட்டம் எதற்காகக் கொண்டுவரப்பட்டதோ அந்த லட்சியத்திலிருந்து விலகிவிடக் கூடாது என்பதற்காகவே முன்பு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதன்படி, ஆட்கள் செய்யக்கூடிய வேலைகளைக்கனரக இயந்திரங்கள் துணைகொண்டு செய்யக் கூடாது என்பது முக்கிய நிபந்தனை. அப்படியே இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டாலும் மொத்த வேலையில் அதன் பங்களிப்பு 40%-க்கு மேல் இருக்கக் கூடாது என்பதே அரசின் நிலை. இதனாலேயே கடினமான சில வேலைகளைத் தொழிலாளர்கள் செய்ய முடியாதபோது திட்ட அமலில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன.
மேலும், விவசாய வேலை மிகுந்த நாட்களில் அரசின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்குப் பெரும் எண்ணிக்கையில் விவசாயத் தொழிலாளர்கள் சென்றதால், நில உடைமையாளர்களுக்கு அப்போது ஆள் பற்றாக்குறை ஏற்பட்டது. அத்துடன் ஊதியமும் அதிகம் கொடுக்க நேர்ந்தது. இடுபொருள் செலவு உயர்வு, தண்ணீர் பற்றாக்குறை போன்றவற்றால் அவதிப்பட்டு வந்த விவசாயிகளுக்கு, ஆள் பற்றாக்குறையும் ஊதிய உயர்வும் பெருத்த பின்னடைவாகவே அமைந்தன.
ஆனால், தற்போதைய மாற்றத்தால் மாநில அரசுகள் அவரவர் மாநிலங்களில் விவசாய வேலை அதிகமுள்ள நாட்களில் இந்த திட்டத்தை அமல் செய்யாமல், வேலையில்லாப் பருவத்தில் திட்டமிட்டு மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திப் பாசன வாய்க்கால்களைத் தூர் வாருவது, புதிய கால்வாய்களை அமைப்பது, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளைப் பராமரிப்பது, கசிவுநீர்க் குட்டைகளை ஏற்படுத்துவது போன்றவற்றை மழைக் காலத்துக்கு முன்னால் திட்டமிட்டு விரைந்து செய்துமுடித்தால், விவசாயத்துக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.
தோட்டக்கலை வளர்ச்சிக்கு மகாராஷ்டிரம் இதுபோன்ற திட்டத்தைத்தான் 1990-களில் பயன்படுத்தியது. அதன் பலனாக கூடுதலாக 10 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பழமரச் சாகுபடியின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதனால் 23 கோடி மனித வேலைநாட்கள் உருவானதுடன், பழச் சாகுபடியில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்தது மகாராஷ்டிரம். இந்த விஷயத்தில் அன்றைய மகாராஷ்டிரத்தை முன்னுதாரணமாகக் கொள்வது அவசியம்.
ஏழைத் தொழிலாளர்களுக்குச் செலவுக்குப் பணம் கொடுக்கும் கருணைத் திட்டமாக இல்லாமல், பயனுள்ள, நிரந்தர விவசாயச் சொத்துகளை உருவாக்கும் திட்டமாக, முக்கியமாக, வறுமை ஒழிப்புக்கான திட்டமாக இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது இனி மாநில அரசுகளின் பொறுப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக