புதன், 16 ஜூலை, 2014

காமராஜர் ஆட்சி - கொடிக்கால் ஷேக் அப்துல்லா

இந்தியா மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டது சரியானதுதானா? இன்றைக்கும்கூட அந்த முடிவு கடுமையாக விமர்சிக்கப்படுகிறதே?
அதுதான் சரியானது; அதுதான் பொருத்தமானது. தேசிய நலன் என்ற பெயரிலும் பிராந்தியப் பிரிவினை எண்ணங்கள் வலுவடையும் என்ற பெயரிலும் மொழிவாரிப் பிரிவினையை விமர்சித்தவர்கள் உண்மையில் தேசிய இனங்களின் அடையாளங்களை அழிக்கவே முயற்சித்தார்கள். ஒருவேளை அவர்கள் நோக்கப்படி பொருளாதார நோக்க அடிப்படையிலான மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தால், இன்றைக்கு இந்தியா சிதறிப்போயிருக்கும்.

இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் தொடங்கி எல்லாத் தேர்தலிலும் பங்கெடுத்திருக்கிறீர்கள். அன்றைய சூழலை இன்றைய சூழலோடு ஒப்பிட முடியுமா?

கொஞ்சம்கொஞ்சமாகச் சீரழிந்திருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். எவ்வளவோ படிக்கிறோம், சம்பாதிக்கிறோம், வளர்கிறோம் என்றெல்லாம் சொன்னாலும், நாம் எந்த இடத்தில் நிற்கிறோம் என்பதைத் தேர்தல்கள்தான் சரியாக அடையாளப்படுத்துகின்றன. பணம், இனம், சூது இவைதானே தேர்தலைத் தீர்மானிக்கின்றன? அன்றைக்கு அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு, பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்குச் சமூகத்தில் ஒரு மதிப்பு இருந்தது. அரசியல்வாதிகளும் அந்த மதிப்புக்குக் கட்டுப்பட்டே கண்ணியமாக நடந்துகொண்டார்கள். இன்றைக்கு இரு தரப்பிலுமே அது போய்விட்டது. நான் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலராக இருந்தபோதுகூட, வீட்டில் மளிகைச் சாமான் வாங்கக் காசு இல்லாத நிலையை எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால், கவனம் எல்லாம் கட்சியில்தான் இருந்தது. நான் இல்லாதபோது வீட்டுக்கு வரும் தோழர்கள் அடுக்களையில் என்ன இருக்கிறது, இல்லை என்று பார்த்துவிட்டுத் தங்கள் கைக் காசில் சாமான் வாங்கிப் போட்டுவிட்டுப் போவார்கள். ஆனால், பணம் என் பொதுவாழ்க்கையைப் பாதிக்கவில்லை. இன்றைக்கெல்லாம் இது சாத்தியமா? அரசியல் முழுக்க முழுக்கப் பணக் காரர்கள்வசம் போனதுதான் நடந்ததிலேயே மோசம்.

எந்தக் காலகட்டத்தில் இது நடந்தது? முக்கியக் காரணம் யார்?

படிப்படியாகத்தான் நடந்தது. இதிலே யாருமே நியாயவான் என்று சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியைப் பொற்காலம் என்று சொல்கிறோம். அந்த காமராஜரே சுதந்திரப் போராட்டத்தில் போராடிய தூக்குமேடை ராஜகோபாலுக்கும் காசிராஜனுக்கும் தேர்தலில் போட்டியிட இடம் கொடுக்கவில்லையே? பெருமுதலாளிகளான எம்.சி.சங்கர ரெட்டியாருக்கும் அய்யநாடாருக்கும்தானே கொடுத்தார்? ஆக, யாரும் இதில் விதிவிலக்கு இல்லை.

சுதந்திரம் அடைந்தபோது, காங்கிரஸுக்கு அடுத்த நிலையில் இருந்த இடதுசாரிகள் ஏன் கொஞ்சம்கூட முன்னகர வில்லை? ஒரு முன்னாள் இடதுசாரியாக நீங்கள் இதுபற்றி யோசித்திருக்கிறீர்களா?

ஒரு எழுத்தாளர் சொன்னதுபோல, ‘கம்யூனிஸம் என்பது விவாதிக்க வேண்டிய சிந்தனை அல்ல; அது நன்கு சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு.’ கம்யூனிஸ்ட்டுகள் செய்ய வேண்டியதெல்லாம், அந்தந்தச் சமூகத்துக்கு ஏற்ப அதை எப்படிச் செயல்படுத்த வேண்டியது என்கிற வழிமுறையைக் கையாள்வதுதான். இந்திய கம்யூனிஸ்ட்டுகள் அந்த வழிமுறையை இன்னும் கண்டடையவில்லை.

சரி, இந்தியச் சமூகத்தின் தலையாய பிரச்சினையாக எதைச் சொல்வீர்கள்?
சாதி.

அதனால்தான் மதம் மாறினீர்களா?
ஆமாம்.

சாதியிலிருந்து தப்பிக்க மதம்தான் புகலிடமா?
என்னளவில் கண்டுகொண்ட வழி இது. அம்பேத்கர் இந்த வழியைத்தானே கையாண்டார்?

இந்தியாவில் இந்து மதம்போலவே இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களிலும் சாதிப் பாகுபாடு இருக்கத்தானே செய்கிறது?
என் தனிப்பட்ட அனுபவத்திலிருந்து இல்லை என்று சொல்வேன். நிச்சயமாக இந்து மதம் அளவுக்குச் சாதிப் பாகுபாடு எங்கும் இல்லை என்பதை எல்லோருமே அறிவார்கள்.

சரி, அன்றைய செல்லப்பாவிலிருந்து இன்றைய அப்துல்லா வரையிலான ஒட்டுமொத்தப் பொது வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையில் சொல்லுங்கள்... இந்தியா என்ற நாட்டை எப்படி மதிப்பிடுகிறீர்கள்? இதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
இந்தச் சாதி, மதம், பணப் பாகுபாடு எல்லாவற்றையும் தாண்டி நாம் நமக்கான வாழ்க்கையைத் தீர்மானித்துக் கொள்வதற்கான உரிமையை இந்த நாடு வழங்கியிருக்கிறது பார்த்தீர்களா? அதைத்தான் - அந்த ஜனநாயகத்தைத்தான் - நான் எல்லாவற்றுக்கும் ஆதாரமாகப் பார்க்கிறேன். எவ்வளவோ கொடுமைகளையெல்லாம் அனுபவித்திருக்கிறேன். எல்லாவற்றி லிருந்தும் மீண்டுவிட முடியும் என்ற நம்பிக்கையையே இந்த நாடுதான் தந்திருக்கிறது. நிச்சயம் நல்ல மாற்றங்கள் வரும் என்று நினைக்கிறேன். நேற்று வரை அர்விந்த் கேஜ்ரிவால் யார்? இன்றைக்கு அவரும் ஒரு அகில இந்தியத் தலைவராக உருவாகியிருக்கிறாரே? பல நல்லவர்கள் அவர்கள் பின் அணிவகுக் கிறார்களே? எப்படி? நாடு தன் தேவைக்கு ஆட்களை உருவாக்குகிறது. உருவாக்கிக் கொள்ளும். நான் இந்தியாவை நம்பிக்கையுடனேயே பார்க்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக