புதன், 9 ஜூலை, 2014

கிழக்கு இந்தியா

தன்பாத், இந்தியாவின் நிலக்கரித் தலைநரம். தன்பாத்தைச் சுற்றிப் புறப்பட்டால் நான்கு ஊருக்கு ஒரு ஊர் என்கிறரீதியில் நிறைய சுரங்கங்களைப் பார்க்க முடிகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட சுரங்கங்கள் இருக்கின்றன என்று சொன்னார்கள். ஆண்டுக்குச் சுமார் 27.5 மில்லியன் டன் நிலக்கரியை இந்தச் சுரங்கங்கள் உற்பத்திசெய்கின்றன. அனல்மின் உற்பத்தியும் புனல்மின் உற்பத்தியும் ஜரூராக நடக்கின்றன. நாட்டிலேயே மும்பைக்கு அடுத்து, இந்திய ரயில்வேக்கு வருமானம் கொடுப்பது தன்பாத் கோட்டம்தானாம். ஆனால், இந்தத் தொழில் - வருமானப் புள்ளிவிவரங்களையெல்லாம் வைத்து, தன்பாத்தையோ ஜார்க்கண்டையோ கற்பனைசெய்தால் ஏமாந்துபோவீர்கள். சுற்றிலும் வனாந்தரம், நடுநடுவே சுரங்கங்கள், பெரும் இடைவெளி விட்டு வீடுகள், பரிதாபமான உடைகளில் வியர்க்க விறுவிறுக்க ஓடும் மக்களே இங்கு பெரும்பான்மை அடையாளங்கள்.
************************************
கிழக்கு இந்தியாவின் பெரும் பகுதி வங்கக் கடலோரத் திலும் கங்கைச் சமவெளியிலுமே இருக்கிறது. ஜார்க்கண்ட் மலைப் பிரதேசம் என்றாலும் கனிம வளத்துக்குப் பஞ்சம் இல்லை. ஆனாலும், ஏழ்மை சூழ்ந்திருக்கிறது. காரணம், மோசமான அரசியல். “பிஹாரையே எடுத்துக்கொள்ளுங்களேன், பண்டைய இந்தியாவின் கல்வி மையம் இது. ஐந்தாம் நூற்றாண்டிலேயே உலகின் முக்கியமான கல்விக் கேந்திரமாக இருந்தது நாளந்தா. பின்னர் ஏற்பட்ட அழிவுகளைக்கூட நாம் காரண மாகச் சொல்ல முடியாது. ஏனென்றால், பிரிட்டிஷார் காலத்தில் மீண்டும் கல்வியைத் தூக்கி நிறுத்தினார்கள். ஆனால், சுதந்திரத்துக்குப் பின், சத்யேந்திர நாராயண் சின்ஹாவோடு கல்வித் துறை இங்கு புதைகுழிக்குச் சென்றுவிட்டது. வேலைவாய்ப்புகளை இது நாசமாக்கிவிட்டது. விளைவு, இன்று பிஹாரிகள் நாடு முழுக்கக் கூவிக்கூவி வேலைக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் பேராசிரியர் சத்யேந்திரா. “ஏனைய பகுதிகளின் நிலையும் இதுதான். ஒடிசாவை எடுத்துக்கொண்டால், ஒரியர்கள் எந்த அளவுக்கு வேலைக்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்றால், இன்றைக்கு ஒரியர்கள் அதிகம் வசிக்கும் நகரம் கொல்கத்தா என்கிற அளவுக்கு” என்கிறார் அவர்.

ரயிலில் சந்தித்த, ஒடிசாவைச் சேர்ந்த ஒரு விவசாயி, “எங்களுக்கு நன்றாகத் தெரியும். எங்களைச் சுரண்டித் தின்னத்தான் அரசாங்கமும் தொழில் நிறுவனங்களும் விரும்புகின்றன. நாங்கள் நம்பிய எல்லா அரசியல்வாதிகளும் அவர்களுக்குத் துணை போய்விட்டார்கள். மாவோயிஸ்ட்டுகளின் எங்களுக்காகக் கேள்வி கேட்கிறார்கள்” என்றார்.

கிழக்கு இந்தியாவின் கணிசமான பகுதிகள் மாவோயிஸ்ட்டுகள் கைகளில் இருக்கின்றன. இந்தப் பகுதிகளில் அரசாங்கம் அவர்கள் நடத்துவது. சகர்பந்தா வனப் பகுதியில் மத்தியப் படைகளால் ‘விடுவிக்கப்பட்ட' 15 கிராமங்கள் இந்தத் தேர்தலில் பங்கேற்கின்றன. எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் வாக்களிக்கப்போகிறீர்கள் என்று கேட்டபோது, 30 ஆண்டுகளுக்குப் பிறகு என்று சொன்னார்கள். இதுதான் கள நிலைமை!
**********************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக